இறைவனின் திருப்பெயரால்....

Pages

Sunday, March 20, 2011

மாற்றங்களை வரவேற்கும் மனசுள்ள மக்கள்:திருவண்ணாமலை மாவட்ட நிலவரம்

மாற்றங்களை வரவேற்கும் மனசுள்ள மக்கள்:திருவண்ணாமலை மாவட்ட நிலவரம்
 

திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை, தண்டராம்பட்டு, ஆரணி, வந்தவாசி (தனி), செங்கம் (தனி), போளூர், செய்யாறு, கலசப்பாக்கம் மற்றும் பெரணமல்லூர் ஆகிய ஒன்பது தொகுதிகள் இருந்தன. மறு சீரமைப்புக்கு பின் தண்டராம்பட்டு, பெரணமல்லூர் ஆகிய இரு தொகுதிகள் நீக்கப்பட்டு, புதிதாக கீழ்பென்னாத்தூர் தொகுதி உருவாக்கப்பட்டுள்ளது.

செங்கம் (தனி): காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த, மறைந்த போளூர் வரதன் இந்த தொகுதியில், எம்.எல்.ஏ.,வாக இருந்தார். செங்கம் அரசு மருத்துவமனை தரம் உயர்த்தவில்லை. திருவண்ணாமலை - பெங்களூரு சாலை தரம் உயர்த்தப்படாத நிலை. பாதுகாக்கப்பட்ட குடிநீர் இல்லை; பால் குளிரூட்டும் நிலையம் துவக்க, துணை முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். ஆனால், திட்டம் நிறைவேற்றப்படவில்லை.

ஏரிகளில் தூர்வாராததால் மழை நீரை தேக்கி வைத்து விவசாயம் செய்ய முடியவில்லை. 10 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள மேல் செங்கம் அரசு விதைப்பண்ணை மூடப்பட்டுள்ளது. தொழிற்சாலை எதுவும் இல்லாததால், பிழைப்பு தேடி பெங்களூருக்கு செல்ல வேண்டியுள்ளது. தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., கடுமையாக மல்லுகட்டும்.

திருவண்ணாமலை: தி.மு.க.,வைச் சேர்ந்த பிச்சாண்டி இந்த தொகுதி, எம்.எல்.ஏ.,வாக உள்ளார். விவசாயிகளுக்கு உழவர் சந்தையைத் தவிர, வேறு எந்தப் பணியும் குறிப்பிடும்படி செய்யவில்லை. வேலை வாய்ப்பை உருவாக்க வழிவகை செய்யாததால் பெங்களூரு, திருப்பூர் போன்ற நகரங்களுக்கு பிழைப்பைத் தேடி இடம்பெயரும் அவலம் உள்ளது. எனினும், இந்தத் தொகுதி தி.மு.க., கோட்டையாகவே இருந்து வருகிறது.கீழ்பென்னாத்தூர்: புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கீழ்பென்னாத்தூர் தொகுதியில், பிச்சாண்டி போட்டியிடுகிறார். சொந்த செல்வாக்கில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது.

கலசப்பாக்கம்: இந்த தொகுதியில் அ.தி.மு.க.,வைச் சேர்ந்த எம்.எல்.ஏ., அக்ரிகிருஷ்ணமூர்த்தி உள்ளார். மீண்டும் இந்தத் தொகுதியில் அவரே போட்டியிடுகிறார். எதிர்க்கட்சியாக இருந்ததால் தொகுதி மக்களுக்கு அடிப்படை வசதிகளைத் தவிர வேறு எதுவும் குறிப்பிடும்படி செய்ய முடியவில்லை. எனினும், மக்களிடம் நல்ல செல்வாக்கை பெற்றவர். மீண்டும் அவரே சொந்த செல்வாக்காலும், கூட்டணி பலத்தாலும் வெற்றி பெற வாய்ப்புள்ளது.

போளூர்: காங்கிரசைச் சேர்ந்த விஜயகுமார் இங்கு எம்.எல்.ஏ.,வாக உள்ளார். விவசாயிகள் பயன்பெறும் திட்டங்கள் எதுவும் செய்யவில்லை. போளூர் அரசு மருத்துவமனையை மேம்படுத்தவில்லை. செண்பகத்தோப்பு அணையை திறக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. விஜயகுமார் எளிமையாக பழகக்கூடியவர் என்பதால் இவர் மீது அதிருப்தி இல்லை. அதே சமயம் பலத்த வரவேற்பும் இல்லை.

ஆரணி: தி.மு.க., வை சேர்ந்த சிவானந்தம் இந்த தொகுதி எம்.எல்.ஏ., வாக உள்ளார். மீண்டும் போட்டியிடுகிறார். இதுவரை இங்கு தொடர்ந்து ஒருவரோ அல்லது ஒரே கட்சியோ வெற்றி பெற்றதில்லை. ஆரணியில் புதிய பஸ் ஸ்டாண்ட் அமைக்கப்படவில்லை, ஆரணி அரசு மருத்துவமனை தரம் உயர்த்தப்படாத நிலை, குடிநீர்ப் பிரச்னை, பட்டு ஜரிகை உற்பத்தி தொழிற்சாலை, பட்டு சாயப்பட்டறை தொழிற்சாலை, நெசவாளர்களுக்கான மூலப்பொருள் விற்பனை செய்யும் அங்காடி, உற்பத்தி செய்யப்படும் பட்டுப்புடவைகள் விற்பனை செய்வதற்கான கொள்முதல் நிலையம் அமைக்கப்படாத நிலை உள்ளது.ஆரணியில் அரசு இன்ஜினியரிங் கல்லூரி கொண்டு வந்தது தவிர வேறு எதுவும் குறிப்பிடும்படி செய்யப்படவில்லை. சொந்த நலனில் அக்கறை கொண்டு செயல்பட்டவர் சிவானந்தம் என மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். மீண்டும் தி.மு.க., வெற்றி பெறுவது கடினம். அ.தி.மு.க.,வுக்கு வாய்ப்புள்ளது.

செய்யாறு: தொகுதியில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சேர்ந்த விஷ்ணுபிரசாத் எம்.எல்.ஏ.,வாக உள்ளார். விவசாயிகளுக்குத் தேவையான வசதிகள் செய்து தரப்படவில்லை. "சிப்காட்' தொழிற்சாலை உருவாக்கப்பட்டுள்ளதால், வேலை வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்தவர் என்பதால், எளிதாக மக்கள் சந்திக்க முடியாத நிலை.

வந்தவாசி (தனி): தி.மு.க.,வைச் சேர்ந்த கமலக்கண்ணன் இந்த தொகுதி, எம்.எல்.ஏ.,வாக உள்ளார். மீண்டும் இந்தத் தேர்தலில் போட்டியிடுகிறார். நலிவடைந்துள்ள பாய் நெசவுத்தொழிலை மேம்படுத்தவில்லை; பனை பொருள் வளர்ச்சி கழகத்தின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள தொழிற்சாலை செயல்படாமல் உள்ளது. வந்தவாசியில் பஸ் பாடி கட்டும் தொழிலை மேம்படுத்த நடவடிக்கை இல்லை ஆகிய குற்றச்சாட்டுகள் உள்ளன.வந்தவாசி தொகுதியில் நிலையாக எந்தக் கட்சியும் வெற்றி பெற்றதில்லை. தற்போது உள்ள நிலையில் இந்தத் தொகுதியை, அ.தி.மு.க., கூட்டணி வெல்ல வாய்ப்புள்ளது.

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை தமுமுக எவ்வகையிலும் பொறுப்பாகாது.