சென்னை : தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணி முறிவு ஏற்பட்டதை, தமிழக காங்கிரசார் உற்சாகமாக வரவேற்கின்றனர். "தனித்து நிற்போம்; தன்மானத்தை காப்போம்' என, காங்கிரஸ் தொண்டர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் தோல்வி அடைந்ததால், தி.மு.க., - காங்கிரஸ் கட்சியின் ஏழாண்டு நட்பில் விரிசல் ஏற்பட்டுள்ளது. மத்திய அமைச்சரவையிலிருந்து காங்கிரஸ் விலகுவதாக தி.மு.க., எடுத்துள்ள அதிரடி முடிவு குறித்து காங்கிரஸ் தொண்டர்கள் சிலர் கூறியதாவது:தி.மு.க., கூட்டணியை 99 சதவீதம் காங்கிரஸ் தொண்டர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. கூட்டணி முறிவு முடிவை வரவேற்கிறோம். தி.மு.க., கூட்டணியில் இணைந்து தேர்தலில் தோல்வியை தழுவுவதை விட, தனித்து நின்று தோல்வி பெற்றாலும் அதை பெருமையாகவே நாங்கள் கருதுவோம். தி.மு.க., கூட்டணியை விரும்பாத தொண்டர்கள் புதுவேகத்துடனும், உத்வேகத்துடனும் போராடுவர். இந்த தேர்தலில், காங்கிரஸ் அரியணையில் உட்காரப் போவதில்லை. அதனால், எங்களுக்கு எந்த நஷ்டமும் இல்லை; தி.மு.க.,வுக்கு தான் நஷ்டம். முதல்வர் பதவி எங்களுக்கு கிடைக்கப் போவதில்லை. மீண்டும் ஆட்சியைப் பிடிக்க தி.மு.க.,வுக்கு தான் ஆசை உள்ளது.
மறைந்த தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தி, காங்கிரஸ் கட்சி தனித்து நிற்க வேண்டும் என ஆசைப்பட்டவர். அவரது ஆசை நிறைவேறட்டும். அ.தி.மு.க., கூட்டணியில் நாங்கள் செல்வதற்கும் தயாராக இருக்கிறோம்.கடந்த 2009ம் ஆண்டு லோக்சபா தேர்தல் முடிந்ததும், மத்திய அமைச்சரவை பதவி ஏற்பு நிகழ்ச்சியில் முதல்வர் கருணாநிதி கலந்து கொள்ளவில்லை. தனது கட்சியினருக்கு நிபந்தனை விதித்தும், மிரட்டல் விடுத்தும் மத்திய அமைச்சர் பதவிகளை பெற்றார். அப்படியிருக்கும் போது காங்கிரஸ் நிபந்தனை விதித்தது, மிரட்டல் விடுத்தது என்று சொல்வதெல்லாம் ஏற்றுக் கொள்ள முடியாது.
தொகுதிப் பங்கீட்டில் ஏற்பட்ட பிரச்னைகளை அறிக்கையாக முதல்வர் ஏன் வெளியிட வேண்டும். உள்ளே பேச வேண்டிய விஷயங்களை வெளியே சொல்ல வேண்டிய அவசியம் என்ன? நாங்கள் அதிகமான தொகுதிகளை கேட்பது உரிமை. கொடுப்பதும், கொடுக்காததும் அவர்களது உரிமை. எந்த நியாயத்தின் அடிப்படையில் 63 சீட்டுகளை காங்கிரஸ் கேட்கிறது என முதல்வர் கருணாநிதி சொல்கிறார்.ஆனால், எந்த நியாயத்தின் அடிப்படையில் 1980ம் ஆண்டில் தி.மு.க., காங்கிரஸ் 110 சீட்டுகளில் நின்றது எப்படி? இதே காங்கிரஸ் எம்.ஜி.ஆருடன் கூட்டணி வைத்து 72 சீட்டுகளை பெற்றுள்ளது. இதுவரை தி.மு.க.,விடம் பிச்சை எடுத்தது போதும். ராகுல் முயற்சியால் நாங்கள் கஷ்டப்பட்டு கூழ் குடிக்கவே ஆசைப்படுகிறோம்.
காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களில் சிலர் கரை வேட்டி கட்டாத தி.மு.க.,வினராக செயல்படுகின்றனர். தி.மு.க.,வுக்கு ஆதரவாக செயல்படுபவர்களை வெற்றி பெற வைப்பர். மற்றவர்களை உள்குத்து மூலம் தோல்வி பெற வைப்பர். எனவே, தி.மு.க., கூட்டணியிலிருந்து வெளியேறியதை வரவேற்கிறோம். தனித்து நிற்கும் முடிவு எடுத்தாலும் ஏற்றுக் கொள்வோம். தனித்து நிற்போம்; தன்மானத்தை காப்போம்; தனித்தன்மையை காப்போம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
0 comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.
வாசகர்களின் கருத்துக்கு அதிரை தமுமுக எவ்வகையிலும் பொறுப்பாகாது.