இறைவனின் திருப்பெயரால்....

Pages

Sunday, March 6, 2011

மத்திய அரசுக்கு ஆபத்து ஏற்படுமா?

புதுடில்லி : மத்திய அரசிலிருந்து தி.மு.க., வெளியேறுவதால், மன்மோகன் சிங் தலைமையிலான அரசுக்கு எந்த ஆபத்தும் ஏற்படாது.

லோக்சபாவில் காங்கிரஸ் கட்சிக்கு 207 எம்.பி.,க்களும், திரிணமுல் காங்கிரசுக்கு 19 எம்.பி.,க்களும், தி.மு.க., 18, தேசியவாத காங்கிரஸ் 9, தேசிய மாநாட்டு கட்சி 3, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 2, ஜே.வி.எம்., மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு தலா 1 எம்.பி.,க்களும் உள்ளனர். அதாவது 260 எம்.பி.,க்களின் ஆதரவு உள்ளது. தி.மு.க.,வைச் சேர்ந்த 18 எம்.பி.,க்கள் ஆதரவை விலக்கிக் கொண்டால், காங்கிரஸ் கூட்டணியின் பலம் 242 ஆகக் குறையும்.தற்போது லோக்சபா உறுப்பினர்கள் எண்ணிக்கை 543. இதில், தனிப் பெரும்பான்மைக்கு 272 உறுப்பினர்கள் ஆதரவு அவசியம். தி.மு.க., ஆதரவை வாபஸ் பெற்றால் கூட, சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சிகள் வெளியில் இருந்து ஆதரவு அளிப்பதால், அரசுக்கு எந்தவித ஆபத்தும் ஏற்படாது.

லோக்சபாவில் சமாஜ்வாடி கட்சிக்கு 22 எம்.பி.,க்களும், பகுஜன் சமாஜ் கட்சிக்கு 21 எம்.பி.,க்களும் உள்ளனர். சமாஜ்வாடி கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்.பி.,யான ஜெயப்பிரதாவும் மத்திய அரசுக்கு ஆதரவு அளித்து வருகிறார். இவர்கள் தவிர, லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளத்தைச் சேர்ந்த நான்கு பேர், மதச்சார்பற்ற ஜனதா தளத்தைச் சேர்ந்த மூன்று பேரும் வெளியில் இருந்து ஆதரவு அளிக்கின்றனர்.இந்த ஆதரவுகளை எல்லாம் கணக்கில் கொண்டால், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு 311 எம்.பி.,க்கள் ஆதரவு உள்ளது. அதனால், அரசுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை.

தி.மு.க., விலகல் காங்., மழுப்பல் : காங்., தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசிலிருந்து விலகுவதாக தி.மு.க., அறிவித்தது குறித்து கருத்து தெரிவிக்க, காங்., மறுத்துவிட்டது.

காங்., செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி, நிருபர்களிடம் கூறியதாவது:காங்., - தி.மு.க., இடையிலான தொகுதி உடன்பாட்டில் சுமுகமான முடிவு எட்டப்படும் என்ற நம்பிக்கை இன்னமும் எங்களுக்கு உள்ளது. இது போன்ற ஒரு சூழலில், ஐ.மு., கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை, தி.மு.க., விலக்கிக் கொள்வதாக அறிவித்தது குறித்து, எதுவும் கூற முடியாது. அவ்வாறு தெரிவிக்கும் பட்சத்தில், அது குழப்பத்தையே ஏற்படுத்தும்.இவ்வாறு அபிஷேக் சிங்வி கூறினார்.

பா.ஜ., கருத்து :"மத்திய அரசிலிருந்து தி.மு.க., விலகியதால் உருவாகியுள்ள சூழ்நிலைகளை நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம். தொடர்ச்சியாக பல ஊழல் குற்றச்சாட்டுக்களில் சிக்கித் தவிக்கும் மன்மோகன்சிங் அரசுக்கு இது மற்றொரு அடியாகும்' என, பாரதிய ஜனதா கட்சியின் தகவல் தொடர்பாளர் ராஜிவ் பிரதாப் ரூடி கூறினார்.

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை தமுமுக எவ்வகையிலும் பொறுப்பாகாது.