இறைவனின் திருப்பெயரால்....

Pages

Sunday, March 13, 2011

தேர்தல் கமிஷன் அதிரடியில் இதுவரை சிக்கிய பணம்: தொடர்கிறது கிடுக்கிப்பிடி வேட்டை

சென்னை : ""தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து இதுவரை, பல்வேறு இடங்களில் 15 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது,'' என, தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் கூறினார்.

அவர், நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி:தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை தவறாக பயன்படுத்தி, போலியாக ஊழியர்களின் பெயர்களை சேர்த்து, மக்களுக்கு பண வினியோகம் நடந்து வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம், புவனகிரி தாலுகாவில் உள்ள அகரம் ஆலம்பாடி ஊராட்சியில், இது போன்ற முறைகேடு நடந்துள்ளது. ஊராட்சித் தலைவர் சங்கரை கைது செய்ய, மாவட்ட கலெக்டர், "வாரன்ட்' பிறப்பித்துள்ளார்.இது தெரிந்ததும், தலைவர் தலைமறைவாகியுள்ளார். அவரை, தலைவர் பதவியில் இருந்து நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது போன்ற முறைகேடுகள் வேறு எங்கும் நடக்காத அளவிற்கு கண்காணிக்க வேண்டும் என, மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கட்சியினருக்கு எச்சரிக்கை: பத்தாயிரம் ஓட்டுச்சாவடிகளில், கேமரா பொருத்தப்பட உள்ளது. இது தொடர்பாக, வாக்காளர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தும் வகையில், அரசியல் கட்சியினர் சில தகவல்களை பரப்பி வருவதாக தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக புகார்கள் வந்தால், கடும் நடவடிக்கை எடுப்போம்.வாக்காளர்கள் எந்தக் கட்சிக்கு ஓட்டு போடுகின்றனர் என்பதை, கேமரா மூலம் கண்டுபிடித்து விட முடியும் என்று கூறி, தங்களது கட்சிக்குத் தான் ஓட்டு போட வேண்டும் என வலியுறுத்தி வருவதாகக் கூறப்படுகிறது. உண்மையில், வாக்காளர் எந்தக் கட்சியின் சின்னத்தில் ஓட்டை பதிவு செய்கிறார் என்ற விவரம் மட்டும், கேமராவில் பதிவாகாது. அந்த கோணத்தில் தான், கேமராக்களை பொருத்துவோம். எனவே, வாக்காளர்கள் எந்தவித பயமும் இன்றி, தாங்கள் விரும்பிய வேட்பாளர்களுக்கு ஓட்டு போடலாம்.

மதுரை வசூல்: தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்ததில் இருந்து, இதுவரை 15 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக, வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 11ம் தேதியன்று, மதுரை மாவட்டத்தில் நான்கு கார்களில் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.ஒரு காரில் 89 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய், மற்றொரு காரில் 1 கோடியே 6 லட்சம் ரூபாய், மூன்றாவது காரில் 55 லட்சம் ரூபாய், நான்காவது காரில் 12 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. முதற்கட்ட விசாரணையில், ஒரு வங்கியில் இருந்து மற்றொரு வங்கிக்கு கொண்டு சென்றதாக தெரிவித்துள்ளனர்.அப்படியிருந்தாலும், ஆவணங்கள் இருக்க வேண்டும். மேலும், வங்கிப் பணம் என்றால், வாகனத்துடன் பாதுகாவலர்கள் செல்வர். அதுபோல், ஆவணங்களோ, பாதுகாவலர்களோ இல்லை. ஈரோட்டில், ஒரு காரில் 50 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட பணம் அனைத்தும், வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.மத்திய அமைச்சர் அழகிரி மீதான புகார் குறித்து, தேர்தல் கமிஷனுக்கு அவர் பதில் அனுப்பியுள்ளார். அதைப் பற்றிய விவரம் எங்களுக்குத் தெரியாது. மற்றவர்கள் மீது தொடரப்பட்ட வழக்கில், தொடர்ந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

வாகனங்களுக்கு கட்டுப்பாடு: வேட்பு மனு தாக்கலின் போது, வேட்பாளருடன் மூன்று கார்கள் மட்டுமே அனுமதிக்கப்படும். அதேபோல், கட்சித் தலைவர்கள் பிரசாரத்திற்கு செல்லும் போது, 10 கார்கள் மட்டும் செல்லலாம். அதிக வாகனங்கள் சென்றால், நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தலின் போது, தேர்தல் கமிஷன் மூலம் வாக்காளர்களுக்கு வீடு வீடாக ஓட்டுச் சீட்டுகளை வழங்கப்படும். ஓட்டுச் சீட்டுகள் அச்சிடும் பணி நடந்து வருகிறது. அரசியல் கட்சியினரும் ஓட்டுச் சீட்டுகளை வழங்கலாம்.தேர்தலையொட்டி, எம்.எல்.ஏ.,க்களின் அலுவலகங்களை பூட்டி விட உத்தரவிட்டுள்ளோம். உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்கள், அலுவலகப் பணிக்காக, அலுவலகத்தை பயன்படுத்தலாம். வேறு காரணங்களுக்காக, அரசு அலுவலகங்களை பயன்படுத்தக்கூடாது.இவ்வாறு பிரவீன்குமார் கூறினார்.

மூன்று லட்சம் பீடிகள் பறிமுதல் : தேர்தலில் வாக்காளர்களை கவனிக்க, பல்வேறு யுக்திகளை அரசியல் கட்சிகள் கையாண்டு வருகின்றன. பல இடங்களில், பல்வேறு பொருட்களை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்து வரும் நிலையில், திருக்கோவிலூரில் நேற்று முன்தினம் ஒரு காரில் 24 லட்சம் ரூபாயையும், ஒரு வாகனத்தில் மூன்று லட்சம் எண்ணிக்கையிலான பீடி பண்டல்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பீடி குடிப்பவர்களை குஷிப்படுத்த, பீடிகள் எடுத்துச் சென்றிருக்கலாம் என கூறப்படுகிறது.

காங்., கவுன்சிலர் வீட்டில் சோதனை : பிரவீன்குமார் கூறும் போது, ""ஈரோட்டில் காங்கிரஸ் பெண் கவுன்சிலர் ஒருவர் வீட்டில், 11 கோடியே 50 லட்சம் ரூபாய் பதுக்கி வைத்திருப்பதாக தகவல் கிடைத்தது. அதையடுத்து, அந்த வீட்டில் சோதனை நடத்தியதில், அந்த தொகைக்கு வர்த்தக பரிவர்த்தனை நடந்திருப்பதற்கான ஆவணங்கள் மட்டுமே கிடைத்தன; ரொக்கம் எதுவும் கிடைக்கவில்லை,'' என்றார்.

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை தமுமுக எவ்வகையிலும் பொறுப்பாகாது.