இறைவனின் திருப்பெயரால்....

Pages

Sunday, March 6, 2011

எந்த தேர்தலிலும் இப்படியொரு நிலையை சந்தித்ததில்லை: கருணாநிதி வேதனை

சென்னை : ""எந்தவொரு தேர்தல் தொகுதி பங்கீட்டிலும், இப்படி ஒரு நிலையை தி.மு.க., சந்தித்ததில்லை,'' என, முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கை:நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் மதச்சார்பற்ற தன்மையை காக்கும் வகையில் தி.மு.க., செயல்படுகிறது. இந்த கொள்கைகளின் அடிப்படையில் தான், எந்த ஒரு கட்சியுடனும் அணி சேர்ந்து பணியாற்றுகிறது. இதிலிருந்து மாறாமல், கடந்த ஏழு ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியுடனும், மற்ற தோழமை கட்சிகளுடனும் நட்புறவு கொண்டு லோக்சபா தேர்தலில் பணியாற்றியதோடு, ஜனநாயக ரீதியில் நடக்கும் பிற தேர்தல்களிலும் அணி சேர்ந்து தி.மு.க., போட்டியிட்டது.இந்த சட்டசபை தேர்தலில் புதுவிதமான பிரச்னைகள் உருவாக, காங்கிரஸ் காரணமாகியது என்பது தி.மு.க.,வை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. காங்கிரஸ் தலைவர் சோனியாவை ஒவ்வொரு தேர்தலின் போதும், நான் சந்தித்து கருத்துகளை பரிமாறிக் கொள்வதை போல, இந்த சட்டசபை தேர்தலிலும் என் உடல் நிலையை கூட பொருட்படுத்தாமல் டில்லி சென்று, இரண்டு நாள் தங்கியிருந்து அவரை சந்தித்த போது, சோனியாவின் விருப்பத்தின் பேரில் தி.மு.க., - காங்கிரஸ் பேச்சுவார்த்தை நடத்த தீர்மானித்தது.

காங்கிரஸ் கட்சி குழுவினர் பேச்சுவார்த்தைக்கு வர காலதாமதமானதால், பா.ம.க., உள்ளிட்ட மற்ற கட்சிகளுடன் தி.மு.க., பேச்சுவார்த்தை நடத்தத் துவங்கியது. மற்ற கட்சிகளுடன் கலந்து பேசி அதுவரை இறுதி முடிவாக எத்தனை தொகுதிகள், எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் என்பதை தீர்மானிக்காமல் இருந்து, அதன் பிறகே கடந்த 20ம் தேதியன்று காங்கிரஸ் கட்சி குழுவினரோடு பேச்சுவார்த்தை நடந்தது.காங்கிரஸ் குழுவினருடன் நடத்திய பேச்சவார்த்தையில் எந்த முடிவும் ஏற்படாத நிலையில், இறுதி முடிவுக்காக, மத்திய அமைச்சர் குலாம்நபி ஆசாத் சென்னை வந்து பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டார். அவர் முன்னிலையிலேயே நான் நடத்திய பேச்சுவார்த்தையில் 57 தொகுதிகள் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்ய ஒப்புதல் கொடுத்தோம்.

அது பற்றி டில்லி சென்று ஆலோசனை நடத்தி அறிவிப்பதாக கூறிவிட்டு ஆசாத் சென்றார். அதன் பின் டில்லியிலிருந்து பேசிய ஆசாத், 60 தொகுதிகள் காங்கிரசுக்கு தேவையென்றும், அப்போது தான் ஒப்பந்தத்தில் கையெழுத்திட முடியும் என்றும் கூறினார். இதையடுத்து, 60 தொகுதிகள் அளிக்கவும் ஒப்புக் கொண்டடோம். சென்னை வந்து கையெழுத்திட்டு ஒப்பந்தத்தை நிறைவேற்றிக் கொள்ளலாம் என்றும் கேட்டுக் கொண்டேன். அவர்கள் சென்னை வந்து ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார்கள் என்று எதிர் பார்த்த நிலையில், 60 தொகுதிகள் போதாது; 63 தொகுதிகள் ஒதுக்க வேண்டும்; அந்த தொகுதிகளை அவர்களே நிர்ணயம் செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தனர்.மேலும், ஒப்பந்தம் செய்யும் போதே, எந்தெந்த தொகுதிகள் என்பதை குறிப்பிட வேண்டும் என்றும் நிபந்தனை விதித்தனர்.

சட்டசபை தேர்தலானாலும், லோக்சபா தேர்தலானாலும் இது வரை நடை பெற்ற எந்த ஒரு தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையிலும் இப்படியொரு நிலையை தி.மு.க., தலைமை சந்தித்தது இல்லை. இதை காணும் போது, கடந்த தேர்தலில் ஒதுக்கப்பட்ட 48 இடங்களில் துவங்கி, 51, 53, 55, 57 இறுதியில் 60 தொகுதிகளுக்கு ஒப்புக் கொண்டு தி.மு.க., ஒப்புதல் அளித்தது. அதன் பிறகு 63 தொகுதிகள் வேண்டும் என்பதும், அந்த தொகுதியின் பெயர்களை பரஸ்பரம் இரண்டு கட்சிகளும் பேசி முடிவு செய்யாமல், அவர்கள் நிர்ணயிப்பதையே கொடுக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்ததும் அதிர்ச்சி தரக் கூடியதாக அமைந்தது.

நானோ, பொதுச் செயலரோ முடிவு எடுத்து அறிவிப்பதாக இருக்கக் கூடாது என்பதற்காக, உயர்நிலை செயல் திட்ட குழுவில் விவாதித்து முடிவு எடுக்க தீர்மானித்தோம். இந்த தேர்தல் உடன்படிக்கைக்காக தொடக்கத்திலிருந்து எடுக்கப்பட்ட முடிவுகளையும், உருவாக்கப்பட்ட பிரச்னைகளையும் எண்ணிப் பார்க்கும் போது, இரு கட்சி தொண்டர்களும் மன வேறுபாடு இன்றி நேச மனப்பான்மையோடு பணியாற்ற குந்தகம் ஏற்பட்டுள்ளது.தேர்தல் முடிவு பாதிப்புக்கு இது போன்ற பிரச்னைகள் இழுத்தடிப்புகள் காரணமாகிவிடும் என்பதற்காக, காங்கிரஸ் கட்சியின் இந்த போக்கு தேர்தல் உடன்பாட்டை சுமூகமாக செய்துக் கொள்வதற்கு பதிலாக, இதையே சாக்காக வைத்து அகற்றிவிட எண்ணுவதாக சந்தேகத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறோம்.இவ்வாறு கருணாநிதி தெரிவித்துள்ளார்.**

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை தமுமுக எவ்வகையிலும் பொறுப்பாகாது.