தொடர்கிறது சீட் கேட்ட காங்கிரசாரின் தவிப்பு: பட்டியலை இறுதி செய்வதில் இழுபறி
தி.மு.க., அணியில், தமிழக காங்கிரசின் வேட்பாளர் பட்டியல் இறுதி செய்வதில் இழுபறி நீடிக்கிறது. தேர்தலில் போட்டியிடுவதற்கு சீட் கேட்டு, கோஷ்டித் தலைவர்களின் ஆதரவாளர்கள், கடந்த நான்கு நாட்களாக, டில்லியில் முற்றுகையிட்டுள்ளனர். சிட்டிங் எம்.எல்.ஏ.,க்கள் சிலருக்கு தொகுதி கிடைக்காததால், இளைஞர் காங்கிரசாருக்கு ஒதுக்கப்பட்ட கோட்டாவிற்கு கடும் போட்டி நிலவுகிறது. இன்று வெளியாகும் வேட்பாளர்கள் பட்டியலில் யார், யார் இடம் பெறுவர் என, காங்கிரசாரின் தவிப்பு திக், திக்கென தொடர்கிறது.
காங்கிரசின் மத்திய தேர்தல் குழு கூட்டம், கட்சித் தலைவர் சோனியா தலைமையில் டில்லியில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று முன்தினம் நடந்தது. இதில், தமிழக காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியலுடன், மத்திய அமைச்சர் வயலார் ரவி, மாநில பொறுப்பாளர் குலாம் நபி ஆசாத், தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு ஆகியோர் பங்கேற்றனர். வேட்பாளர் பட்டியலில் தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலுவின் மனைவி ஜெயந்தி பெயர் இடம்பெற்றுள்ளதை, சில மேலிட தலைவர்கள் விரும்பவில்லை என்றும், வேட்பாளர்கள் பட்டியலில் குழப்பம் இருந்ததாகவும், அதை சரிசெய்து புதிய பட்டியல் கொண்டு வருமாறு சோனியா உத்தரவிட்டதாகவும் கூறப்படுகிறது. மூன்றாவது முறை, நான்காவது முறை போட்டியிடும் சிட்டிங் எம்.எல்.ஏ.,க்களுக்கு சீட் கொடுக்கக் கூடாது என, மேலிட தலைவர் ஆஸ்கர் பெர்னாண்டசை முற்றுகையிட்டு காங்கிரசார் கோஷம் எழுப்பினர். அவரும் இந்த கோரிக்கை குறித்து பரிசீலிப்பதாக தெரிவித்தார். "சிட்டிங் எம்.எல்.ஏ.,க்களில் மூன்று முறை எம்.எல்.ஏ.,வாக இருந்தவர்களுக்கு சீட் ஒதுக்கக் கூடாது என மேலிடம் எடுத்த முடிவை மாற்ற வேண்டும்' என, சோனியாவிடம் மத்திய அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. "வேட்பு மனு தாக்கல் செய்த பின் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவதற்கு இன்னும் 18 நாட்கள் மட்டுமே உள்ளதால், புதிய வேட்பாளர்கள், தொகுதியில் அறிமுகமாவதற்கு சிரமம் ஏற்படும். இதனால், காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றி பாதிக்கும். எனவே, சிட்டிங் எம்.எல்.ஏ.,க்கள் தொகுதி மக்களுக்கு அறிமுகமானவர்கள் என்பதால், இந்த முறை அவர்களுக்கு சீட் ஒதுக்கீடு செய்ய வேண்டும். இது தான் தற்போதைய நிலை; இருப்பினும் உங்களது முடிவுக்கு நாங்கள் கட்டுப்படுகிறோம்' என, அந்த அமைச்சர் விளக்கியுள்ளார்.
இதையடுத்து, மூன்று முறை எம்.எல்.ஏ.,வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு சீட் இல்லை என்ற முடிவை சோனியா மாற்றிக் கொண்டார். நேற்று இரவு 7 மணி நிலவரப்படி சிட்டிங் எம்.எல்.ஏ.,க்கள் 35 பேரில், 24 பேர் வேட்பாளர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். சிட்டிங் எம்.எல்.ஏ.,க்கள் ராணி வெங்கடேசன், விஜயகுமார், ராமன் ஆகியோருக்கு தொகுதி மறுசீரமைப்பு அடிப்படையில் தொகுதிகள் கிடைக்கவில்லை. அவர்களுக்கு வேறு தொகுதியை ஒதுக்கீடுசெய்வதற்குரிய பேச்சுவார்த்தையும் நேற்று இரவு வரை நீடித்தது. வெற்றிவாய்ப்பை பெறும் அளவுக்கு தனிப்பட்ட செல்வாக்குள்ள புதுமுகங்களையும், அலசி ஆராய்ந்து பார்க்கும்படி முக்கிய தலைவர்களை சோனியா கேட்டுக்கொண்டுள்ளார். சிட்டிங் எம்.எல்.ஏ.,க்களில் தொகுதிக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், தங்களை வளப்படுத்திக் கொண்டவர்கள் யார், யார் என்ற பட்டியலும் சோனியாவின் கைக்கு கிடைத்துள்ளது. அவர்களுக்கு இந்த முறை வாய்ப்பு மறுக்கப்படும் என தெரிகிறது. தி.மு.க.,வுக்கு புகழ் பாடியவர்களுக்கும் சீட் மறுக்கப்படும் என தெரிகிறது. அதேபோல் இளைஞர் காங்கிரஸ் கோட்டாவில் ஏழு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த தொகுதிகளை கைப்பற்றுவதில் இளைஞர் காங்கிரசார் மற்றும் கோஷ்டித் தலைவர்களின் ஆதரவாளர்கள் சிலருக்கும் கடும் போட்டா போட்டி ஏற்பட்டுள்ளது. இதனால், பட்டியலை இறுதி செய்வதில் இழுபறி நீடிக்கிறது. வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளிவரவுள்ளது. பட்டியலில் யார், யார் இடம் பெறுவர் என, காங்கிரசாரின் தவிப்பு தொடர்கிறது.
0 comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.
வாசகர்களின் கருத்துக்கு அதிரை தமுமுக எவ்வகையிலும் பொறுப்பாகாது.