இறைவனின் திருப்பெயரால்....

Pages

Sunday, March 13, 2011

சிறுபான்மையினரின் காவலனா தி.மு.க.?-சீறுகிறார் ஜவாஹிருல்லா -ஜீனியர் விகடனில் பிரசுரமான பேட்டி

சிறுபான்மையினரின் காவலனா தி.மு.க.?-சீறுகிறார் ஜவாஹிருல்லா -ஜீனியர் விகடனில் பிரசுரமான பேட்டி


ஜவாஹிருல்லா

'2009    மக்களவைத் தேர்தலில் தி.மு.க.அணியில், இரண்டு எம்.பி. ஸீட் தரவில்லை’ என த.மு.மு.க-வின் மனித நேய மக்கள் கட்சி தனித்துப் போட்டியிட்டனர். இந்த முறை அ.தி.மு.க. அணியில் மூன்று சட்டமன்றத் தொகுதிகளை மட்டுமே பெற்று த.மு.மு.க-வின் 'ம.ம.க.’ போட்டியிடுகிறது. ஏன் இந்த மனமாற்றம்? தலைவர் ஜவாஹிருல்லாவிடம் கேட்டோம்.

''அ.தி.மு.க. அணியில் லட்சியம் 12, நிச்சயம் 6 பெறு​வோம் என சொன்னீர்கள். கடைசியில் மூன்று தொகுதிகள்தானே பெற முடிந்தது?''

''துடிப்புமிக்க, ஆற்றல்மிகு தொண்டர் பலம்​கொண்ட கட்சியான ம.ம.க-வுக்கு கூடுதல் இடம் பெற முயற்சித்தோம். கிடைக்கவில்லைதான். ஆனால், ஊழல் மலிந்த, மக்கள் விரோத தி.மு.க. ஆட்சியை அப்புறப்படுத்த, வலுவான கூட்டணி அமைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் அ.தி.மு.க. அணியில் இணைந்துள்ளோம். சிறுபான்மை அரசியலில் இது முக்கியமான சாதனையாகச் சொல்லலாம்.91-ம் ஆண்டுக்குப் பிறகு  மூன்று தொகுதிகளுடன் தனிச் சின்னம் பெற்றுள்ளோம். 2001-ல் அ.தி.மு.க. அணியில் தேசிய லீக் லத்தீஃப் ஒரு தொகுதி பெற்று 'பஸ்’ சின்னத்தில் நின்றார். அதே அணியில், 2006-ல் இரண்டு இடங்கள். ஆனால், இரட்டை இலை சின்னம்தான். தி.மு.க. அணியிலோ முஸ்லிம் லீக்குக்கு இரண்டு இடங்கள், ஆனால் போட்டியிட்டது உதயசூரியன் சின்னத்தில்தான். எனவே, முதல் முறையாக தேர்தலைச் சந்திக்கும் ம.ம.க-வுக்கு, தனி சின்னத்தில் மூன்று தொகுதிகள் என்பது நல்ல நிலைதானே!''

''சிறுபான்மையினரின் பாதுகாவலன் என தி.மு.க-வைப்பற்றி சொல்லப்படுகிறதே?''

''இது ஒரு மாயை. முஸ்லிம்கள் தனி அரசியல் பலம் பெற்றுவிடாமல் தடுக்கும் பணியை தி.மு.க. நாசூக்காகவே செய்கிறது. அங்கு முஸ்லிம்கள் வஞ்சிக்கப்படுகின்றனர். சாதிக் பாட்சாவுக்குப் பிறகு, அங்கு தலைமை நிர்வாகிகளில் ஒருவர்கூட முஸ்லிம் இல்லை. வேலூர் முகமது சகியும், நீலகிரி முபாரக்கும் மாவட்டச் செயலாளர்களாக இருந்தார்கள். இப்போது, தி.மு.க-வில் ஒரு மாவட்டச் செயலாளர்கூட முஸ்லிம் இல்லை.

இன்னொன்று... முஸ்லிம் மக்கள் அடர்த்தியாக வசிக்கும் பகுதியில் அவர்களில் ஒருவரை மக்கள் பிரதிநிதி ஆக்காமல், 'அந்தப் பகுதி தி.மு.க. தலைவர்​களுக்குப் பாதுகாப்பானது’ என அந்தக் கட்சித் தலைவர்கள் பலரும் போட்டியிட்டு வெற்றி பெற்​றனர். சென்னை துறைமுகம் தொகுதியில் திருப்பூர் மொய்தீனுக்குப் பிறகு, செல்வராஜ் வந்தார். அடுத்து கலைஞரும், அன்பழகனும் போட்டி​யிட்டார்கள். சேப்பாக்கத்தில் லத்தீஃபுக்கு அடுத்து, ரகுமான்கானை தி.மு.க. நிறுத்தியிருக்க முடியும். ஆனால், கலைஞரே போட்டியிட்டு எளிதாக வென்றார். ரகுமான்கானோ, பூங்காநகர் தொகுதியில் தோல்வி அடைந்தார்.

சிறுபான்மைக் கட்சிகள் தனி அரசியல் அடையாளம் பெற்று​விடக் கூடாது என்பதில் தி.மு.க. கவனமாக இருக்கிறது. தங்களுடன் ஒரு பச்சைக் கொடி வேண்டும் என்பதற்காக, முஸ்லிம் லீக்கை சிறுபான்மை அணியைப்போல வைத்திருக்கிறார்கள். கடந்த மக்களவைத் தேர்தலில்கூட முஸ்லிம் லீக் கட்சியின் சார்பில், 'காதர் மொய்தீனை ஏணிச் சின்னத்தில் நிறுத்துவது’ என அந்தக் கட்சியின் பொதுக் குழு முடிவு செய்தது. தி.மு.க. தலைமை இதில் தலையிட்டு, துபாயில் இருந்து அப்துர் ரஹ்மான் என்பவரை வேலூர் மக்களவைத் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் நிறுத்தினர். கடந்த சட்டமன்றத் தேர்தலிலும் தி.மு.க. அணியில் முஸ்லிம் லீக், உதயசூரியன் சின்னத்தில்தான் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டது. இப்போதும், தி.மு.க. அணியில் முஸ்லிம் லீக்குக்கு மூன்று இடங்கள், உதயசூரியன் சின்னம் என அறிவித்தார்கள். அந்த மூன்று இடங்கள்கூட கடைசியில் இரண்டாகிவிட்டது.''

''முஸ்லிம்களுக்கு தனி ஒதுக்கீடு பெற்றது தி.மு.க. ஆட்சியில்​​தானே... அது தவிர, காங்கிரஸ் கட்சியையும் எதிர்ப்பது ஏன்?''

''கேரளத்தில் 71-ம் ஆண்டிலேயே முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வந்துவிட்டது. 67-ல் இருந்தே தி.மு.க-வுக்கு முஸ்லிம் மக்கள் ஆதரவு அளித்துவந்தனர். மறைந்த அப்துல் லத்தீஃப் 99-லேயே கருணாநிதியிடம் ஒரு சதவிகிதம் இடஒதுக்கீடு கேட்டார். ஆனால், அவர் தரவில்லை. 10 ஆண்டுகளுக்கும் மேல் தொடர்ந்து நாங்கள் போராடிய பிறகு, தேர்தல் ஆதாயம் கருதியே, தி.மு.க. ஆட்சி முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்கியது. அதைச் செயல்படுத்துவதில் பலவிதமான சிக்கல்கள். இதுபற்றி வெள்ளை அறிக்கை கேட்டோம். அதை வெளியிடுவதற்குத் தயங்குகிறார்கள்.

உருதுவைத் தாய்மொழியாகக்கொண்ட முஸ்லிம்கள் சமச்சீர் கல்வியால் பாதிக்கப்படுவதைத் தடுக்க, உரிய நேரத்தில் உரிய திருத்தம் செய்யப்படவில்லை. கட்டாய 'திருமணப் பதிவு’ச் சட்டத்தில்... பள்ளிவாசல், ஜமாத்துகள் பதிவுசெய்து தரும் ஆவணங்களை ஏற்பதாக சட்ட அமைச்சர் துரைமுருகன் உறுதி அளித்தார். ஆனால், இந்துக் கோயில்களில் வழங்கப்​படும் சான்றிதழ்களை மட்டும் ஏற்றுக்கொள்ள உத்தர​விட்டுவிட்டு, முஸ்லிம்களின் கோரிக்கையை நிறைவேற்றவே இல்லை.

மேலும், சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடு வழங்கு​மாறு நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா குழு 2007-ல் பரிந்துரைத்தது. இதுவரை, மத்திய காங்கிரஸ் - தி.மு.க. கூட்டணி அரசு அதைச் செயல்படுத்தவே இல்லை. தேர்தல் அறிக்கை​யில் இதைச் செயல்படுத்த நடவடிக்​கை எடுப்பதாக உறுதியளித்த தி.மு.க-வும், கண்டுகொள்ளவே இல்லை. மேலும், நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் நடைபெற்ற குண்டு​வெடிப்புகள் தொடர்பாக, ஆண்டுக்கணக்கில் சிறைவைக்கப்​பட்டுள்ள அப்பாவி முஸ்லிம்களை விடுதலை செய்யவும் மத்திய, மாநில அரசுகள் மறுக்கின்றன. எனவே, சிறுபான்மையினரின் காவலன் தி.மு.க. என்பதை ஒப்புக்கொள்ள முடியாது.''

''பி.ஜே.பி-யுடன் கூட்டணிவைத்தது தவறு எனக் கூறிவிட்டு, பிறகு அந்தக் கட்சியுடன் கூட்டு சேர்ந்தவர் ஜெயலலிதா. அப்படிப்பட்டவருடன் சேர்ந்திருப்​பதன் மூலம் கொள்கையைவிட தேர்தல் ஆதாயம்தான் முக்கியம் என நீங்களும் மாறிவிட்டீர்களே?''
''99-ம் ஆண்டு சென்னைக் கடற்கரை சீரணி அரங்கில் த.மு.மு.க. நடத்திய முஸ்லிம்களின் வாழ்வுரிமை மாநாட்டில்தான், ஜெயலலிதா அம்மையார், 'பி.ஜே.பி-யுடன் இனி கூட்டணிவைக்க மாட்டேன்’ என உறுதிமொழி அளித்தார். ஆனால், 2004 மக்களவைத் தேர்தலில் அவர்​களோடு கூட்டணிவைத்தார். அது உண்மைதான். ஆனால் இன்று தி.மு.க. ஆட்சியை மாற்ற வேண்டும் என்பதில் ஒன்றாக நிற்கிறோம். அம்மையார் இனியும் பி.ஜே.பி-யுடன் கூட்டுவைக்க மாட்டார் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது!''

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை தமுமுக எவ்வகையிலும் பொறுப்பாகாது.