ஜப்பானின் வடகிழக்கு கடலோர பகுதியில் இன்று காலை 8.9 ரிக்டர் அளவுக்கு பயங்கர பூகம்பம் ஏற்பட்டது. தலைநகர் டோக்கியோவில் இருந்து வடகிழக்கே 380 கிலோ மீட்டர் தூரத்தில் கடலுக்குள் மையமாக கொண்டு இந்த பூகம்பம் தாக்கியது. இதனால் ஜப்பான் வடக்கு பகுதியில் கட்டிடங்கள் குலுங்கின. அலுவலகத்தில் இருந்தவர்கள் அலறியடித்து கீழே இறங்கி ஓடி வந்தனர்.
டோக்கியோ உள்பட முக்கிய நகரங்களில் உள்ள பெரிய கட்டிடங்களும் குலுங்கின. இதனால் பொதுமக்கள் பெரும் பீதி அடைந்தனர். இந்த பூகம்பத்தை தொடர்ந்து சுனாமி அலைகள் உருவாகின. அந்த பேரலைகள் சுமார் 13 அடி உயரத்துக்கு எழுந்து ஜப்பான் வடகடலோர பகுதிகளை தாக்கியது. ஊருக்குள் பல கிலோ மீட்டர் தூரத்துக்கு கடல் நீர் புகுந்தது. இதனால் கார்கள் அடித்துச் செல்லப்பட்டன. பல்லாயிரக்கணக்கான மக்கள் சுனாமி அலைகளில் சிக்கி இழுத்துச் செல்லப்பட்டனர்.
ஜப்பானின் வடபகுதி முழுவதும் தொலை தொடர்பும், மின்சார இணைப்பும் துண்டிக்கப்பட்டது. இதனால் எந்தெந்த பகுதிகளில் பேரழிவு ஏற்பட்டு உள்ளது என்ற இன்னும் தெரியவில்லை. பூகம்பம் ஏற்பட்டு அதை தொடர்ந்து சுனாமி அலைகள் தாக்கியதால் ஜப்பானின் வடபகுதியில் உள்ள கட்டிடங்கள் நொறுங்கி தீ பிடித்தன. அணுஉலைகள் தீப்பிடித்து எரிந்தன.
அமெரிக்காவின் ஹவாய் பகுதியில் அமைந்துள்ள பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் விடுத்துள்ள அறிவிப்பில், சுனாமி அலைகள் ஜப்பான், ரஷியா, மார்க்ஸ் தீவுகள், வடக்கு மரியானாஸ், குவம், தைவான், பிலிப்பைன்ஸ், இந்தோனேஷியா, ஹவாய் ஆகிய பகுதிகளை தாக்கும் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு சுனாமி ஆபத்து இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.
வாசகர்களின் கருத்துக்கு அதிரை தமுமுக எவ்வகையிலும் பொறுப்பாகாது.