இறைவனின் திருப்பெயரால்....

Pages

Tuesday, March 8, 2011

தி.மு.க.- காங்கிரஸ் தொகுதி உடன்பாடு ஏற்பட்டது; காங்கிரசுக்கு 63 தொகுதிகள்

சென்னை, மார்ச். 8-
 
தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க.-காங்கிரஸ் இடையே தொகுதிகளை பங்கீடு செய்வதில் பிரச்சினை ஏற்பட்டது. காங்கிரஸ் கட்சி 63 இடங்களை கேட்டது. அதுவும் அந்த 63 தொகுதிகள் எவை என்பதை தாங்களே முடிவு செய்து கொள்வோம் என்று வலியுறுத்தி வந்தது. காங்கிரசின் கோரிக்கைகள் ஏற்க முடியாதவை என்று கூறி தி.மு.க. 63 இடங்களை கொடுக்க மறுத்து விட்டது.
 
கூட்டணியில் உள்ள பா.ம.க. (31), விடுதலை சிறுத்தைகள் (10), கொங்கு நாடு முன்னேற்றக்கழகம் (7), முஸ்லிம் லீக் (3), மூவேந்தர் முன்னேற்றக் கழகம் (1) ஆகிய கட்சிகளுக்கு 52 இடங்கள் கொடுக்கப்பட்டு விட்டதால், மீதமுள்ள 181 தொகுதிகளில் 60 இடங்களை மட்டுமே தர முடியும் என்று தி.மு.க. உறுதியாகி கூறியது.
 
இதனால் அதிருப்தி அடைந்த காங்கிரசார் மேற்கொண்டு எதுவும் பேசாமல் இருந்தனர். இதையடுத்து காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசில் இருந்து விலகுவதாக தி.மு.க. அறிவித்தது. தி.மு.க. சார்பில் இடம் பெற்றுள்ள 6 மத்திய மந்திரிகள் தங்கள் பதவியை ராஜினாமா செய்வார்கள் என்று அறிவிக்கப்பட்டது. தி.மு.க. மந்திரிகள் 6 பேரும் நேற்று காலை பிரதமரை சந்தித்து ராஜினாமா கடிதம் கொடுக்க தயாரான போது காங்கிரஸ் மூத்த தலைவர் பிரணாப்முகர்ஜி முதல்-அமைச்சர் கருணாநிதியுடன் தொடர்பு கொண்டு மீண்டும் தொகுதி பங்கீடு குறித்து பேசினார்.
 
இதனால் தி.மு.க. மந்திரிகள் ராஜினாமா கடிதம் கொடுப்பது ஒரு நாளைக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து டெல்லியில் காங்கிரஸ் தலைவர்களும், தி.மு.க. மந்திரிகளும் சந்தித்துப் பேச்சு நடத்தினார்கள். அதில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. நேற்றிரவு 9.30 மணிக்கு சோனியாகாந்தி வீட்டுக்கு மந்திரிகள் மு.க.அழகிரி, தயாநிதிமாறன் இருவரும் சென்றனர். சுமார் 40 நிமிடங்கள் சோனியாவுடன் பேசினார்கள். அந்த பேச்சு வார்த்தையிலும் சுமூக முடிவு எட்டப்படவில்லை. எத்தனை தொகுதிகள்? எந்தெந்த தொகுதி? என்ற இரு விஷயங்களிலும் தி.மு.க., காங்கிரசார் தொடர்ந்து பிடிவாதமாக இருப்பதாக தெரிந்தது.
 
இந்த இறுக்கத்தை தளர்த்தும் வகையில் தி.மு.க. ஒரு யோசனை கூறியது. அதாவது காங்கிரஸ் கட்சி கடந்த 2006-ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்ட 48 தொகுதிகளை அப்படியே தந்து விடுவதாகவும் மீதமுள்ள 12 தொகுதிகள் தாங்கள் நிர்ணயிக்கும் தொகுதிகளாகத்தான் இருக்கும் என்று தி.மு.க. தரப்பில் கூறப்பட்டது. தி.மு.க.வின் இந்த யோசனையில் ஏற்கனவே போட்டியிட்ட 48 தொகுதிகளை அப்படியே பெற்றுக் கொள்வது என்பதை மட்டும் காங்கிரஸ் ஏற்றுக்கொண்டது. ஆனால் மீதமுள்ள இடங்கள் 12 என்பதற்கு பதில் 15 ஆக அதாவது மொத்தம் 63 தொகுதிகளாக தர வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர்கள் கூறி வந்தனர்.
 
அதோடு அந்த 15 தொகுதிகளும், நாங்கள் விரும்பும் தொகுதிகளாகத்தான் இருக்க வேண்டும் என்று காங்கிரஸ் மேலிடம் பிடிவாதமாக கூறிவிட்டது.   தி.மு.க.-காங்கிரஸ் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் தற்போது ஏற்பட்டுள்ள முட்டுக்கட்டைக்கு இது தான் காரணமாக கூறப்பபட்டது.
 
இந்த பிரச்சினையை தீர்க்க தி.மு.க. - காங்கிரஸ் மூத்த தலைவர்கள் இன்று (செவ்வாய்) 2-வது நாளாக டெல்லியில்  சோனியா வீட்டில் பேச்சுவார்த்தை நடந்தது. இதில் தி.மு.க. சார்பாக மு.க.அழகிரியும், தயாநிதிமாறனும், காங்கிரஸ் சார்பாக குலாம் நபி ஆசாத், அகமது பட்டேல், பிரணாப் முகர்ஜியும் கலந்து கொண்டனர்.
 
ஆலோசனைக்கு பிறகு தொகுதி உடன்பாடு ஏற்பட்டது என குலாம் நபி ஆசாத் தெரிவித்தார். தி.மு.க. கூட்டணியில் 63 தொகுதிகள் காங்கிரசுக்கு ஓதுக்குவதாக ஒப்புக்கொண்டதாகவும் தெரிவித்தார்.

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை தமுமுக எவ்வகையிலும் பொறுப்பாகாது.