இறைவனின் திருப்பெயரால்....

Pages

Wednesday, February 16, 2011

என்னிடம் விவாதிக்கவில்லை: ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு பற்றி எனக்கு எதுவும் தெரியாது; பிரதமர் மன்மோகன்சிங் பேட்டி

என்னிடம் விவாதிக்கவில்லை: ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு பற்றி எனக்கு எதுவும் தெரியாது; பிரதமர் மன்மோகன்சிங் பேட்டி
புதுடெல்லி, பிப். 16-
 
மத்திய அரசு மீது கடந்த சில மாதங்களாக ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேடு உள்பட பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. இதற்கு பிரதமர்    மன்மோகன்சிங்   விளக்கம் அளிக்கவேண்டும்    என்று பாஜக உள்பட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.   ஆனால் பிரதமர் மன்மோகன்சிங் எந்த கருத்தும் தெரிவிக்காமல் இருந்தார். பிரதமர்  மவுனமாக இருப்பது நாடெங்கும் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியது. ஊழல்  குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக   அவர் பதில் அளிக்கவேண்டும்   என்று கோரிக்கைகள் வலுத்தன.
 
இதையடுத்து  பிரதமர் மன்மோகன்சிங்  அனைத்து சர்ச்சைகளுக்கும் பதில் அளிக்க முடிவு செய்தார்.  இன்று 11 மணிக்கு அவர் தன் வீட்டில் டி.வி. செய்தி ஆசிரியர்களுக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
 
சமீப காலமாக ஸ்பெக்ட்ரம், காமன் வெல்த்,  ஆதர்ஷ் வீடு ஒதுக்கீடு போன்ற பிரச்சினைகளுக்கு பத்திரிகைகள் முக்கியத்துவம் கொடுத்து வந்தன. இது சம்பந்தமாக  விளக்கம் தரவேண்டும் என்பதற்காகவே இந்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்துள்ளேன். இதில் நாட்டு மக்களுக்கு என் பதிலை சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.
 
இந்தியா ஊழல்   மலிந்த நாடாக கருதிவிட  முடியாது. ஊழலை தடுக்க எல்லா நடவடிக்கைகளும்   எடுக்கப்பட்டு வருகின்றன. ஊழல் இல்லாத நாடாக இந்தியா  இருக்க வேண்டும் என்பதுதான் எமது கொள்கை. ஸ்பெக்ட்ரம்,  இஸ்ரோ, காமன்வெல்த், ஆதர்ஷ் ஊழல் போன்ற    அனைத்து பிரச்சினையும் அரசு முக்கியமான விஷயமாக கருதுகிறது. இதில் யார்   தவறு செய்து இருந்தாலும்  அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
 
நாட்டில் பணவீக்கம் முக்கிய பிரச்சினையாக உள்ளது. இதை தடுக்க உரிய நடவடிக்கைகளை    மேற்கொண்டு உள்ளோம். வரும் மாதங்களில் விலைவாசி உயர்வு  கட்டுப் படுத்தப்படும்.  மார்ச் மாதம் முடிவதற்குள் பண வீக்கத்தை 7 சதவீதத்துக்கு கீழ் கொண்டு வருவோம். உணவு பணவீக்கம் 15 சதவீதமாக    இருந்தது. இப்போது 13.07 சதவீதமாக குறைந்து உள்ளது. நாட்டில் பொருளாதார வளர்ச்சி சீராக    செல்கிறது.
 
பொருளாதார    வளர்ச்சியை இந்த ஆண்டு  முழுவதும் 8.5 சதவீதமாக கொண்டு செல்வோம்.   சர்வதேச அளவில் கச்சா எண்ணை விலை உயரும் போது விலைவாசி உயர்வும் ஏற்பட்டு விடுகிறது. கடந்த பாராளுமன்ற கூட்டத்தை எதிர்க்கட்சியினர் நடத்த விடாமல் செய்தனர். அது ஏன் என்று என்னால் புரிந்து கொள்ள    முடியவில்லை. அடுத்த கூட்டத்தை சுமூகமாக நடத்த உரிய முயற்சிகளை மேற்கொண்டு உள்ளோம்.
 
2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை பொறுத்தவரை  அது முழுக்க தொலை தொடர்புத் துறை மந்திரி சம்பந்தப்பட்டது. அதில், `முதலில் விண்ணப் பித்தவர்களுக்கு  முதலில் ஒதுக்கீடு'    என்ற விதிமுறைகள் கொண்டு     வந்தது பற்றியோ  அல்லது யாருக்கு ஒதுக்கீடு    செய்யப்பட்டது என்பது பற்றியோ எனக்கு எதுவும் தெரியாது.இதுபற்றி என்னிடமோ அல்லது மந்திரி சபையிலோ   விவாதிக்க வில்லை. இதில் தொலைத் தொடர்பு      மந்திரிதான் அனைத்து     முடிவுகளையும் எடுத்தார்.
 
ஸ்பெக்ட்ரம்  ஒதுக்கீட்டில் வெளிப்படையான    தன்மை இருக்கவேண்டும் என நான் ஆ.ராசாவுக்கு   2007 நவம்பர் மாதம் கடிதம்  எழுதினேன்.அந்த கடிதத்துக்கு   அன்றே அவர் பதில் கடிதம் எழுதி இருந்தார்.  அதில்,  "நான் (ஆ.ராசா)  கண்டிப்பாக வெளிப்படை  தன்மையை கடைப்பிடிப்பேன்.  எதிர்காலத்திலும் இதை செய்வேன் என்று கூறி இருந்தார். அவர் கொடுத்த     உறுதிமொழிக்கு மாறாக ஏதும் நடக்காது என கருதினேன்.
 
ஆனால்    ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை   ஏலம் மூலம் தான் விடவேண்டும் என்று தொலை தொடர்பு ஒழுங்கு முறை   ஆணையமோ அல்லது தொலை தொடர்பு கமிஷனோ சிபாரிசு செய்ய வில்லை. தொலை    தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமோ அல்லது தொலை தொடர்பு கமிஷனோ சிபாரிசு செய்யாததால் ஏலம் தேவை இல்லை என்ற முடிவை ஆ.பபராசாவே எடுத்து விட்டார். ஆனால்    ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த பின்னணி அதன் பிறகு நடந்த விஷயங்கள், இதன் நோக்கங்கள் எதுவும் எனக்கு தெரியாது.
 
ஆனால் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை ஏலம்   மூலம்தான் செய்யவேண்டும் என்பதை வற்புறுத்த முடியாமல் போய் விட்டது. 2-வது முறையாக காங்கிரஸ் கூட்டணி பதவி ஏற்ற போது ஆ.ராசா மீண்டும் மந்திரியாக நியமிக்கப்பட்டதில் காங்கிரஸ் பங்கு எதுவும் இல்லை. கூட்டணி கட்சியான தி.மு.க. அவரை  தேர்வு செய்தது. இதில் நாங்கள் தலையிட வில்லை. அந்த நேரத்தில் ஆ. ராசா பற்றி தவறான விஷயங்கள் எதுவும் என் மனதில் இல்லை.
 
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் எவ்வளவு இழப்பீடு ஏற்பட்டது என்பதை கணித்து சொல்வது கடினம். இந்த  விவகாரத்தில் பாராளுமன்ற  கூட்டுக்குழு விசாரணைக்கு  நான் பயப்படவில்லை. எந்த குழு முன்பும் ஆஜராகி விளக்கம் அளிக்க தயாராக இருக்கிறேன். எதிர்க்கட்சிகள்    திட்ட மிட்டே பாராளுமன்றத்தை முடக்க    பார்க்கின்றனர். அவர்கள் தங்கள்  கடமையை செய்ய தவறுகின்றனர். நான் பலவீனமான பிரதமர் என்று சொல்வது சரி அல்ல. எனது நடவடிக்கை சரியான திசையிலே செல்கிறது. நான் எந்த சூழ்நிலையிலும் பிரதமர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய மாட்டேன்.
 
எனது பணியை ஒருபோதும் இடையில் விட்டு விட்டு ஓடி விட மாட்டேன். எங்கள் அரசு  வலுவான கூட்டணியுடன்     செயல்படுகிறது. எல்லா கட்சிகளும் முழு மனதோடு ஆதரவு தருகின்றன. எனவே கூட்டணியில் எந்த முறிவும் ஏற்படாது. எதிர்க்கட்சிகளுடன் பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் அவர்கள் பாராளுமன்றத்தை சுமூகமாக நடத்த ஒத்துழைப்பு தர வேண்டும்.
 
பாராளுமன்ற    பட்ஜெட் கூட்டத்தொடர்  முடிந்ததும் மந்திரிசபை மாற்றி அமைக்கப்படும். கூட்டணி மந்திரிசபையில் இருப்பதால்சில விஷயங்களில் விட்டுக்கொடுத்துதான் செல்லவேண்டிய நிலை உள்ளது. இதை மறுக்கவில்லை. இஸ்ரோ  அலைவரிசை ஒதுக்கீடு தொடர்பாக விசாரிக்கப்பட்டு வருகிறது. விரைவில் மந்திரிசபையில் இதுபற்றி விவாதிக்கப்படும். நான் இதுவரை    எந்த தவறும் செய்யவில்லை என்று ஒருபோதும் சொல்ல வில்லை. ஆனால் எந்த குற்றமும் இதுவரை செய்தது இல்லை என்பதை உறுதியாக தெரிவிக்கிறேன்.
 
இவ்வாறு மன்மோகன்சிங் கூறினார்.

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை தமுமுக எவ்வகையிலும் பொறுப்பாகாது.