இறைவனின் திருப்பெயரால்....

Pages

Sunday, February 20, 2011

கலைஞர் டிவி தொடர்பான ஆவணங்கள் எரிக்கப்பட்டுவிட்டன : ஜெ. குற்றச்சாட்டு

கலைஞர் டிவி தொடர்பான ரசீதுகள், பணம் தொடர்பான ஆவணங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டு விட்டதாக அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,

’’முதல்வர் கருணாநிதியை எதிர் கொள்வதில் எந்த அளவுக்கு விவேகத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்ற உண்மையை ரூ 1 லட்சத்து 80 ஆயிரம் கோடி ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழல் குறித்து ஆய்வு நடத்திக் கொண்டு இருக்கும் மத்திய புலனாய்வுத் துறை அதிகாரிகள் உணராதது துரதிர்ஷ்டவசமானது.



தேடப்பட்டு வரும் தீவிரவாதியான தாவூத் இப்ராஹிமுடன் நெருக்கமான உறவு வைத்துள்ள டைனமிக்ஸ் பால்வா குழுமம்,

கலைஞர் டி.வி.க்கு ரூ 206 கோடி பணம் கொடுத்திருக்கிறது என்ற தகவலை நீதிமன்றத்தில் வெளிப்படுத்தியதன் மூலம் மிகப் பெரிய தவறை மத்திய புலனாய்வுத் துறை செய்து இருக்கிறது.


 இது போன்ற சந்தேகம் வெளிப்படுத்தப்படுவதற்கு முன்பு கலைஞர் டி.வி. அலுவலகத்தை சோதனை செய்து அங்குள்ள அனைத்து ஆவணங்களையும் கைப்பற்றி இருக்க வேண்டும். குற்றவாளிகளுக்கு கடைபிடிக்கப்படும் பொதுவான நடைமுறையை பின்பற்றியதன் மூலம் போதுமான கால அவகாசத்தை அளித்து, தப்பிப்பதற்கு மத்திய புலனாய்வுத் துறை வழிவகுத்துவிட்டது.


கலைஞர் டி.வி.யின் கலைக்கூடங்கள் மற்றும் அலுவலகத்தை உள்ளடக்கிய தி.மு.க. தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் இரவோடு இரவாக உயர்மட்டக் குழுக் கூட்டம் நடந்ததாகக் கூறப்படுகிறது.

இரவு 11 மணிக்கு துவங்கிய கூட்டம் மறுநாள் காலை 4 மணியளவில் முடிந்ததாம்.  இந்தக் கூட்டத்தின் போது அண்ணா அறிவாலயக் கட்டடத்திற்கு வெளியே எரிந்து கொண்டிருந்த விளக்குகள் எல்லாம் அணைக்கப்பட்டுவிட்டனவாம்.


13.2.2011 அன்று கலைஞர் டி.வி. தொடர்பான முக்கிய ஆவணங்கள் சாக்கு மூட்டைகளில் அடைக்கப்பட்டு, பெருங்குடியில் உள்ள திறந்தவெளி குப்பைக் கிடங்கிற்கு எடுத்துச் செல்லப்பட்டு எரிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. 


15.2.2011 அன்று, கலைஞர் டி.வி. தொடர்பான ரசீதுகள், பணம் தொடர்பான ஆவணங்கள், ரொக்க செலவுச் சீட்டுகள், பணம் செலுத்தப்பட்டதற்கான ரசீதுகள் சிறு சிறு துண்டுகளாக கிழிக்கப்பட்டு, சென்னை மாநகரில் பல்வேறு பகுதிகளில் உள்ள மாநகராட்சி குப்பைத் தொட்டிகளில் போடப்பட்டதாகக் கூறப்படுகிறது.


 நம்பகமான ஆதாரங்கள் அனைத்தையும் அழித்தபிறகு, குற்ற ஆவணங்கள் இருந்த இடத்தை முழுவதுமாக சுத்தப்படுத்திவிட்டு, ரூ 206 கோடி பணப் பரிமாற்றத்திற்கும், 2ஜி ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழலுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை; பெறப்பட்ட பணம் வட்டியுடன் திருப்பிச் செலுத்தப்பட்டுவிட்டது என்று கனகச்சிதமான ஓர் அறிக்கையை வெளியிட்டார் சரத்குமார். 


இது மட்டுமல்லாமல், மத்திய புலனாய்வுத் துறைக்கோ அல்லது வருமான வரித் துறைக்கோ இதில் ஏதேனும் சந்தேகம் இருக்கும் பட்சத்தில், கலைஞர் டி.வி. தொடர்பான கணக்குகளையும், ஆவணங்களையும் ஆய்வு செய்வதில் எந்தவிதமான ஆட்சேபணையும் இல்லை என்றும் தெரிவித்தார்.

இந்த அழைப்பினை ஏற்று தான், மத்திய புலனாய்வுத் துறை கலைஞர் டி.வி. அலுவலகங்களில் சோதனை நடத்தியது போல் தெரிகிறது. மத்திய புலனாய்வுத் துறை சிரமம் பார்க்காமல் சென்னை மாநகராட்சியின் பல்வேறு இடங்களில் உள்ள குப்பை தொட்டிகளை தோண்டி ஆராய்ந்து பார்த்திருந்தால்,  ஸ்பெக்டரம் ஊழலுக்கும், கலைஞர் டி.வி.க்கும் உரிய பூதாகரமான தொடர்புகளை கண்டுபிடித்து வெளிப்படுத்தி இருக்க முடியும்’’ என்று தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை தமுமுக எவ்வகையிலும் பொறுப்பாகாது.