Thursday, April 15, 2010
மருந்து வியாபாரமா? மரண வியாபாரமா?
Posted by
ADIRAI TMMK
at
15.4.10
போலி மருந்துகளும், காலாவதியான மருந்துகளும், தமிழகத்தில் முழு வீச்சில் பல வருடங்களாக விற்பனை செய்யப்பட்ட கொடுமையான உண்மை அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டு, நாட்டையே உலுக்கி உள்ளது. சில உயிர்கள் பலியான பிறகே இந்தக் கொடூர மோசடி வெளிவந்துள்ளது. சென்னை கொடுங்கையூரில் காலாவதியான மருந்துகளை அழிக்கும் கிடங்கு உள்ளது. கொடுங்கையூருக்குக் கொண்டு வரப்படும் காலாவதியான மருந்துகளை சில கொடுங்கையர்கள் வழியிலேயே மடக்கி, அவற்றை வேறு ஒரு இடத்திற்கு கொண்டு சென்று, காலாவதியான தேதிகளை மாற்றி, புதிய தேதிகளை அச்சடித்து மறுபடியும் விற்பனைக்கு அனுப்பி வந்துள்ளனர்.
இப்படி காலாவதியான மருந்துகளை சாப்பிட்டு, இவரை எத்தனை பேர் காலாவதியாகினார்கள் என்பது கணக்கில் இல்லை. இதுவல்லாமல், போலி மருந்துகளும், நூற்றுக்கணக்கான வகைகளில் புழக்கத்தில் விடப்பட்டு பொதுமக்களின் உயிரோடு திருவிளையாடல் நடத்தப்பட்டுள்ளது. 600 வகையான போலி மருந்துகள் மாநில முழுவதுமுள்ள மருந்து கடைகளுக்கு விநியோகிக்கப்பட்டு கனஜோராக விற்பனை செய்யப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. மருந்து வியாபாரமா? மரண வியாபாரமா?மக்களின் உயிர் அவ்வளவு மட்டமா? அல்லது மாநிலத்தில் இருப்பது கையாலாகாத சட்டமா? ஒன்றும் புரியவில்லை. காலாவதி மருந்துகளை தேதி மாற்றி விற்று, கோடிகோடியாய் குவித்த கும்பலைச் சேர்ந்த பிரதீப் சோர்டியா உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காலாவதி+போலி மருந்து கும்பலின் மூளை என கருதப்படும் மீனா ஹெல்த்கேர் மீனாட்சிசுந்தரம், சஞ்சீவ்குமார், உட்பட 5 பேரை போலீஸ் பிடிக்கவில்லை. அவர்களே நீதிமன்றத்தில் (பாதுகாப்பாக) சரண் அடைந்துள்ளனர். மீனாட்சி சுந்தரம் மருந்துகளின் பெயரால் மரண வியாபாரம் செய்து 100 கோடிக்கு மேல் குவித்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. அப்படி என்றால் எவ்வளவு காலம் இந்தக் கொடுமை அனுமதிக்கப்பட்டுள்ளது என்பதை சிந்தித்துப் பாருங்கள்.
காலாவதி+போலிமருந்து வழக்கு, சிபிசிஐடி குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் திகிலூட்டும் செய்திகள் வெளிவந்த வண்ணமுள்ளன.
வசந்தா பார்மா, மீனா ஹெல்த் கேர் நிறுவனங்களின் பெயரில் காலாவதி மருந்து மாத்திரை விற்றதில் கோடிக்கணக்கில் லாபம் கிடைத்ததால் அவற்றை பிரைவேட் லிமிடெட் கம்பெனிகளாய் மாற்றி மீனாட்சி சுந்தரம் தம்பதியர் அதன் இயக்குநர்களாக இருந்ததும் விசாரணையில் வெளிவந்துள்ளது.
தமிழகம் முழுவதும் 42 ஆயிரம் கடைகளுக்கு மேல், காலாவதி+போலி மருந்துகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. நீங்கள் வழக்கமாய் மருந்து மாத்திரைகள் வாங்கும் கடையும் இதில் இருக்கலாம். மாநிலமெங்கும் மூட்டை மூட்டையாக காலாவதி+போலி மருந்துகள் கொட்டப்படுவதும், கண்டுபிடிக்கப்படுவதும் பத்திரிக்கைகளில் செய்திகளாக வந்து கொண்டிருக்கின்றன. ஆந்திராவைச் சேர்ந்த ராமு என்பவர் டெல்லியில் உள்ள ஒரு கம்பெனியிலிருந்து போலி+காலாவதி மருந்துகளை வாங்கி மீனாட்சி சுந்தரத்துக்கு விற்பனை செய்ததும் அதை மீனாட்சி சுந்தரமும் பல கேடிகளும் சேர்ந்து கோடிகளாய் மாற்றிய கொடுமையும் நடந்துள்ளது. பல மாநிலத்திலும் இந்த பாதக வலை விரிந்துள்ளது.
கல்வியறிவற்றவர்களும், வறுமைகோட்டிற்குக்கீழ் வாழ்கின்ற ஏழை எளியவர்களும் பெரும்பான்மையாக வாழ்கின்ற நம் நாட்டில் மருத்துவம் வணிகமாகவும், மருத்துவமனைகள் கொள்ளைக் கூடங்களாகவும் மருந்து கடைகள் மரண வியாபார கேந்திரங்களாகவும் மாறி இருப்பதற்கு யார் காரணம்? மக்களிடம் வாக்குகளை வாங்கிக் கொண்டு மக்களின் மீது அக்கறையே இல்லாமல் இருக்கின்ற ஆட்சியாளர்கள் அல்லவா?
கிராமங்களில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சென்றால், உயிருக்கு உத்தரவாதமில்லை என்று அஞ்சுகிற மக்கள், தனியார் மருத்துவர்களிடம் செல்கின்றனர். கிளினிக்குகள் என்ற பெயரில் இயங்கும் இவை, ‘கிளின்’ செய்வது நோயை அல்ல, நோயாளியின் மணிப்பர்சை.
மருத்துவர்களுக்கும், ஆய்வகங்களுக்கும் இ.சி.ஜி. ஸ்கேன் நிறுவனங்களுக்கும், மருந்துக் கடைகளுக்கும் இடையே ஓர் அயோக்கிய முற்போக்குக் கூட்டணி உள்ளது. கையில் பிளேடு அறுத்துவிட்டது. மருந்து போட்டு விடுங்கள் என்று போனால், எக்ஸ்ரே, இ.சி.ஜி, ஸ்கேன், ரத்தசோதனை, சிறுநீர் சோதனை, மலம், சளி சோதனை, சோதனை மேல் சோதனை செய்து, பிறகு 4 பக்கங்களுக்கு 40 வகையான மருந்துகளை புரியாத கையெழுத்தில் எழுதித் தருவார், மருத்துவர். எனவே, பணத்தையும், உயிரையும் பாதுகாக்க விரும்பும் ஏழை மக்கள், நேராக மருந்து கடைகளுக்கே சென்று நோயை சொல்லி மருந்துகளை வாங்குவது பரவலாக நடைபெறுகிறது. பத்தாம் வகுப்பு, முடித்து பாதி டாக்டர் வேலை செய்யும் நபர்கள் இருக்கும் மருந்துக் கடைகளில் கூட்டம் அலைமோதுவதுண்டு.
இப்போது, மருந்துக்கடைகளில் விற்கும் மருந்துகளும் போலியானவை, காலாவதியானவை என்றால், எவ்வளவு கொடுமை. காலாவதி மருந்துகளை விற்ற காலிகள் மீது அரசு எடுத்துள்ள காலங்கடந்த நடவடிக்கை இன்னும் கடுமையாக இருக்க வேண்டும்.
பரபரப்பாக பத்திரிகைகளில் வரும் செய்திகள் பத்து நாளைக்குப் பிறகு பழைய செய்தியாகி, பிறகு மறதியை பிறவிக்குணமாய் கொண்ட மக்கள் மனதிலிருந்து மறைந்து விடுவதுண்டு, கொடிய குற்றவாளிகள் சட்டத்தின் பிடியிலிருந்து விடுதலையாவதும் உண்டு.
போதை மருந்து வைத்திருந்தாலே இஸ்லாமிய நாடுகளில் மரணதண்டனை கண்டிப்பாக நிறைவேற்றப்பட்டுவிடும். போலி மருந்தை விற்பவர்களுக்கும் இங்கே போதிய பாதுகாப்புண்டு.
இதுமிகவும் அவலமானது, கேவலமானது. மக்களின் உயிரோடு விளையாடும் கொடியவர்கள், தூக்கு மரத்தில் ஏற்றப்படாவிட்டால், சட்டமும், நீதியும், கழுமரத்தில் ஏறிவிடும் என்பதை அரசாங்கம் கவனிக்க வேண்டும்.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.
வாசகர்களின் கருத்துக்கு அதிரை தமுமுக எவ்வகையிலும் பொறுப்பாகாது.