இறைவனின் திருப்பெயரால்....

Pages

Tuesday, March 30, 2010

முஸ்லிமாக மாறிய பெண் கைது

<span title=இலங்கையில் முஸ்லிம்கள் மூன்றாவது பெரிய சமூகத்தினர் ஆவர்"


இலங்கையில் முஸ்லிம்கள் மூன்றாவது பெரிய சமூகத்தினர் ஆவர்


புத்த மதத்திலிருந்து விலகி இஸ்லாத்தைத் தழுவியிருந்த இலங்கைப் பெண்ணொருவர் தேச விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதான சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.


வளைகுடா நாடான பஹ்ரெய்னை வதிவிடமாகக் கொண்ட இந்தப் பெண், தனது மத மாற்றம் பற்றி அண்மையில் இரண்டு நூல்களை சிங்களத்தில் எழுதியிருந்தார்.


சாரா மாலினி பெரேரா என்ற இந்தப் பெண், இஸ்லாம் மதத்தை மற்ற மதங்களுடன் ஒப்பிட்டு இரண்டு நூல்களை அண்மையில் வெளியிட்டதாகவும், அவற்றில் ஒன்றான ‘இருளிலிருந்து ஒளியை நோக்கி’ என்ற நூலில், தான் எதற்காக தனது மதநம்பிக்கையை மாற்றிக்கொண்டார் என்று அவர் விபரித்துள்ளதாகவும் அப்பெண்ணின் பஹ்ரெய்னில் உள்ள சகோதரி ஒருவரை மேற்கோள் காட்டி கல்ப் டெய்லி நாளேடு செய்திவெளியிட்டுள்ளது.


மூன்று மாத விடுமுறையில் தனது சொந்த நாடான இலங்கைக்கு சென்றிருந்த சாரா மாலினி அங்கிருந்து இந்த நூல்களில் சிலவற்றை வெளிநாடுகளுக்கு பார்சல் சேவை மூலமாக அனுப்புவதற்கு சென்றிருந்தபோது, அங்கு கடமையிலிருந்த பௌத்த தேசிய வாதக்கட்சியைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் அந்நூலைப் பற்றி பொலிசாருக்கு அறிவித்துள்ளதாகவும், அதனைத் தொடர்ந்து சாரா மாலினி கைது செய்யப்பட்டதாகவும் அவரது சகோதரி கூறியுள்ளார்.


கொழும்பு புறநகர்ப் பகுதியொன்றின் பொலிஸ் நிலையத்தில் இந்தப் பெண் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.


தேசத்துக்கும் அரசாங்கத்துக்கும் எதிரான செயல்களில் இவர் ஈடுபட்டுவந்துள்ளார் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாகத் தெரிகிறது என பொலிஸ் பேச்சாளர் பிபிசியிடம் தெரிவித்தார்.


80களின் நடுப்பகுதியிலிருந்து வளைகுடா நாட்டில் சாரா மாலினி பெரேரா வசித்து வருவதாகவும் 1999ம் ஆண்டில் இந்தப் பெண்ணும் அவரது பெற்றோரும் சகோதரிகளும் கூடவே இஸ்லாத்துக்கு மதம் மாறியுள்ளதாகவும் கல்ஃப் டெய்லி செய்தி கூறுகின்றது.


பெளத்த தேசியவாதம் தற்போது மேலோங்கியுள்ள சக்தியாக விளங்கும் இலங்கையில், பெளத்தவாதக்கட்சியொன்று அரசாங்கத்தின் பங்காளியாகவும் உள்ளது.


இலங்கையின் சனத்தொகையில் மூன்றாவது இனக் குழுவாக விளங்கும் முஸ்லிம்கள், அரசியல் பொருளாதார சமூகக் கட்டமைப்பில் முக்கிய இடத்தை வகிக்கின்றனர்.


ஆனால் அங்கு புத்த மதத்தவர்கள் இஸ்லாத்தை தழுவுகின்ற சந்தர்ப்பங்கள் மிக அரிதாகவே இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை தமுமுக எவ்வகையிலும் பொறுப்பாகாது.