இறைவனின் திருப்பெயரால்....

Pages

Friday, July 8, 2011

கியாஸ் சிலிண்டர் விவரங்களை ரேஷன் கார்டில் பதிவு செய்ய அலைக்கழிக்கக் கூடாது: ஏஜென்சிகளுக்கு அரசு உத்தரவு

சென்னை, ஜூலை 8-


தமிழ்நாட்டில் கியாஸ் இணைப்பு இல்லாத வீடுகளுக்கு மாதம் தோறும் 10 லிட்டர் மண்எண்ணை மானிய விலையில் வழங்கப்படுகிறது. கியாஸ் 2 சிலிண்டர்கள் உள்ள குடும்பங்களுக்கு மண்எண்ணை கிடையாது. ஒரு சிலிண்டர் உள்ள குடும்பத்துக்கு 3 லிட்டர் மண்எண்ணை ரேஷன் கடை மூலம் வழங்கப்பட்டு வருகிறது.

ஆனால் பல ரேஷன் அட்டைதாரர்கள் தங்களது கியாஸ் இணைப்புகளை மறைத்து தொடர்ந்து மண்எண்ணை பெற்று வருவதாக புகார்கள் வந்தன. இதை தடுப்பதற்காக அனைத்து ரேஷன் கார்டுதாரர்களும் கியாஸ் சிலிண்டர்களை பதிவு செய்ய வரும் போது தங்களது ரேஷன் அட்டையையும் கொண்டு வந்து அதில் கியாஸ் சிலிண்டர் எண்ணிக்கை விவரங்களை பதிவு செய்ய வேண்டும் என ஏற்கனவே உத்தரவிடப்பட்டிருந்தது.

அதன்படி பெரும்பாலான ரேஷன் கார்டுகளில் சிலிண்டர் இணைப்பு பற்றிய விவரம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு பதிவு செய்யப்பட்டவர்களுக்கு ரேஷன் கடைகளில் மண்எண்ணை வழங்குவது நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில் மண்எண்ணை ஒதுக்கீடு குறைவாக உள்ளதால் கியாஸ் சிலிண்டர் வைத்திருப்பவர்கள், மண்எண்ணை பெறுகிறார்களா? என்பதை கண்டறிய திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதற்காக கியாஸ் ஏஜென்சிகளுக்கு வந்து ரேஷன் கார்டுகளை காட்டி, இணைப்பு பற்றிய விவரத்தை பதிவு செய்ய வேண்டும் என்று கூறப்பட்டு வருகிறது. இதனால் பல ஏஜென்சிகளில் ஒரே நேரத்தில் மக்கள் கூட்டம் அதிகமாகிவிடுகிறது.

இதனால் பொதுமக்களுக்கு, ஏற்பட்டுள்ள சிரமத்தை போக்க அதிகாரிகள் ஆலோசனை நடத்தினார்கள். ஏற்கனவே தமிழக உணவுத் துறை வசம் சிலிண்டர் இணைப்பு பெற்றுள்ள குடும்பத்தினர் பட்டியல் உள்ளதாலும், எண்ணை நிறுவனங்களிடம் இதே போல் பட்டியல் இருப்பதாலும் மக்களை தேவையின்றி அலைக்கழிக்ககூடாது என்று அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

உணவுத் துறை மற்றும் எண்ணை நிறுவனங்களின் பட்டியலை ஒப்பிட்டு பார்த்து அதில் இடம் பெறாத குடும்ப அட்டைதாரர்களை கண்டுபிடிக்க உள்ளனர். இந்த கார்டுதாரர்களை மட்டும் கடைகளுக்கு வரவழைத்து ரேஷன் கார்டுகளில் கியாஸ் சிலிண்டர் விவரங்களை பதிவு செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை தமுமுக எவ்வகையிலும் பொறுப்பாகாது.